Panchajanyam Dec 2012, Issue 163


panchajanyam dec 2012 issue 163 ,84 pages

Threat to Thirumangai AzhwAr’s thirumadhil at Srirangam temple


திருவரங்கத்தில் அரங்கனைக் காண வரும் ஸேவார்த்திகள் ஆலிநாடன் திருமதிலைத்தாண்டி குலசேகரன் திருச்சுற்றில்
உள்ள நாழிகை கேட்டான் வாசலுக்கு, ரயில் நிலையங்களில் காணப்படும் Over Bridge போன்றதொரு அமைப்பு உண்டாக்கப்பட்டு அதன்வழியாக
அழைத்துச் செல்லப்பட உள்ளனர். இதன் விளைவாக ஸேவார்த்திகள் அனைவரும் திருமங்கையாழ்வார் திருமுடிமேல் கால் வைத்து
நடந்து செல்ல உள்ளனர். திருமங்கையாழ்வாரைக் காட்டிலும் அவர் எழுப்பிய திருமதிலே அரங்கனுக்கு அரணாக அமைந்துள்ளது.
திருமங்கையாழ்வாருக்கு அமைந்துள்ள பெருமை அவர் எழுப்பிய மதிலுக்கும் உண்டு.

For more detailed information, Click here to download the Panchajanyam July 2012 Editorial

Return of NamperumaaL – NamperumaaL Asthaanam Thirumbiya naaL


ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:

2010 மே, 31ஆம் நாள், நம்பெருமாள் திருவரங்கத்தை விட்டு அகன்று மீண்டும் 639 ஆண்டுகளுக்குப் பின்பு திருவரங்கத்திற்கு வந்து சேர்ந்த நாள். அதைப் பற்றிய சில சிந்தனைகள்.
1) ஸ்ரீமந்நாதமுனிகள் தொடங்கி ஸ்ரீவைஷ்ணவ ஆசார்யபீடத்தை அலங்கரித்தவர்களில் மணக்கால் நம்பியும் ஒருவர். இவர் வாழ்ந்த காலம் கி.பி.929 -1006. இவர் காலத்தில் ஏற்பட்ட கலகத்தின்போது (இதை ஒட்டியர் கலகம் என்று கோயிலொழுகு குறிப்பிடுகிறது.) பாதுகாப்புக் கருதி அழகியமணவாளன் திருமாலிருஞ்சோலையில் ஓர் ஆண்டு காலம் எழுந்தருளியிருந்தார்.
2) திருமாலிருஞ்சோலை வைகானஸ அர்ச்சகர்கள் ஒரு வருட காலம் அழகியமணவாளனை ஆராதித்து வந்தனர். திருவரங்கத்தில் ஒட்டியர் கலகம் ஒடுக்கப்பட்டவாறே மீண்டும் அழகியமணவாளன் திருவரங்கத்திற்கு எழுந்தருளினார். ஆனால் முன்பு ஆராதனம் செய்து வந்த பாஞ்சராத்ரிகள் கலகத்தின்போது ஊரைவிட்டு அகன்றதாலோ அல்லது கொல்லப்பட்டதாலோ, ஆராதனங்களைச் செய்வதற்கு யாரும் இல்லாததால் வைகானஸ அர்ச்சகர்களே திருவரங்கத்தில் பெரியபெருமாளுக்கு ஆராதனம் செய்து வந்தனர். சுமார் 80 ஆண்டுகள் இவர்கள் திருவரங்கம் கோயிலில் கைங்கர்யத்தில் ஈடுபட்டு வந்தனர். இராமானுசர் காலத்தில்தான் (கி.பி. 1017-1137) திருவரங்கத்தில் மீண்டும் பாஞ்சராத்ரிகள் ஆராதனத்தில் பங்கு கொண்டனர்.
3) கி.பி. 1310ஆம் ஆண்டு மாலிக்காபூர் படையெடுப்பின் போது அழகியமணவாளனின் அர்ச்சா திருமேனி வடக்கே எடுத்து செல்லப்பட்டது. உள்ளூர் பெருமக்கள், கரம்பனூர் பின்சென்றவல்லி மற்றும் அரையர்கள் ஆகியோர் 8 ஆண்டுகள் முயற்சிகள் பல செய்து டெல்லிவரை சென்று அழகியமணவாளனை மீட்டு வந்தனர். இந்த நிகழ்ச்சியோடு தொடர்புடையதுதான் துலுக்கநாச்சியார் வைபவம். அழகியமணவாளன் கொள்ளையடிக்கப்பட்டபிறகு ஆராதனத்தில் எழுந்தருளியிருந்தவர் அவரைப் போன்ற திருமேனி கொண்ட திருவரங்க மாளிகையார் ஆகும். அழகியமணவாளன் ஆஸ்தானம் திரும்பிய பிறகு திருவரங்க மாளிகையார் யாகபேரராக கொள்ளப்பட்டார்.
4) கி.பி. 1323ஆம் ஆண்டு நிகழ்ந்த உலூக்கானின் படையெடுப்பின்போது  அழகியமணவாளன் தெற்கு நோக்கி நீண்டதொரு பயணத்தை மேற்கொண்டு திருமாலிருஞ்சோலை, கோழிக்கோடு, முந்திரி மலை பள்ளத்தாக்கு, திருக்கணாம்பி, திருநாராயணபுரம், திருமலை, செஞ்சி, அழகியமணவாளம் கிராமம் ஆகிய ஊர்களில் எழுந்தருளிய பிறகு கி.பி. 1371ஆம் ஆண்டு (பரீதாபி ஆண்டு-வைகாசி மாதம் 17ஆம்நாள்)  திருவரங்கத்திற்கு 48 ஆண்டுகள் கழிந்து மீண்டும் எழுந்தருளினார்.
5) கி.பி.2010 ஆம் ஆண்டு மே, 31ஆம் நாள் நம்பெருமாள் ஆஸ்தானம் திரும்பி 639 ஆண்டுகள் ஆகின்றன. நம்பெருமாள் தென் தமிழகத்தில் பல பகுதிகளுக்குச் சென்று பல இன்னல்களை எதிர்கொண்டு நம்போல்வார் உய்வடைவதற்காக 48 ஆண்டுகள் கழிந்து ஆஸ்தானம் திரும்பிய நிகழ்ச்சி வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. ஆனால் இந்த நிகழ்ச்சியை நாம் அதற்குரிய முறையில் கொண்டாடுவதில்லை. இதற்கு என்ன காரணம் என்பதை உள்ளபடி அறிய இயலவில்லை. வரலாற்று உணர்வு நமக்கில்லை என்பதும் இதற்கொரு காரணமாகும்.
6) பரீதாபி ஆண்டு வைகாசி 17ஆம் நாள் சேரனை வென்றான் மண்டபம் எனப்படும் தற்போதைய பவித்ரோத்ஸவ மண்டபத்தில்தான் அழகியமணவாளன் எழுந்தருளியிருந்தார். (ஒவ்வொரு ஆண்டும் வைகாசி 17ஆம் நாள் சேரனை வென்றான் மண்டபத்தில் நம்பெருமாளை எழுந்தருளப் பண்ணி நாம் மங்களாசாஸனம் செய்யலாமே. இதில் ஒன்றும் தவறில்லையே. ஏன் இதைச் செய்யக் கூடாது? பொது மக்கள் ஒன்றுகூடி அதிகாரிகளிடம் முறையிடலாமே?) திருவரங்க மாளிகையாரும் அப்போது எழுந் தருளியிருந்ததால் யார் உண்மையான அழகியமணவாளன் என்பதைத் தெள்ளத் தெளிவாக அங்கு கூடியிருந்தோரால் அறுதியிட இயலவில்லை. (ஆயிரக்கணக்கானோர் 1323ஆம் ஆண்டு நடந்த படையெடுப்பின் போது கொல்லப்பட்டதால் 1371ஆம் ஆண்டு முன் நடந்த நிகழ்ச்சிகளை நினைவு கூறுவார் யாருமில்லை. அப்போது வயது முதிர்ந்த ஈரங்கொல்லி ஒருவன் (வண்ணான்) அழகிய மணவாளனின் ஈரவாடை தீர்த்தத்தை (திருமஞ்சனம் செய்த பிறகு அழகியமணவாளன் உடுத்தியிருந்த கைலியைப் பிழிந்து பிரஸாதமாகக் கொடுக்கப்படும் புனிதநீர்) சுவைத்து முன்பு எழுந்தருளியிருந்த அழகிய மணவாளனே “நம்பெருமாள்” என்று அழைத்தான். அவன் இட்ட பெயரே இன்றுவரை வழங்குகிறது.  நம்பெருமாள் என்ற பெயர் ஒரு பாமரன் அன்புடன் இட்ட பெயராகும்.

ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ, 214 கீழை உத்தர வீதி, திருவரங்கம்,திருச்சி-6. தொலைபேசி: 0431-2434398. http://www.srivaishnavasri.wordpress.com  மேலும் பல செய்திகளுக்கு எமது வெளியீடான “நம்பெருமாள் வனவாசம்” (விலை ரூ.10) என்ற நூலை மேற்கண்ட முகவரியில் பெற்றுக் கொள்ளலாம்.

Our audio podcast upanyAsam on the same topic is available here  for download. More such talks at http://www.talksintamil.com/SrivaishnavaSri

Ramanusa Vaibhavam Flex 3


ஸ்ரீமதே ராமாநுஜாய நம : ஸ்ரீமத் வரவரமுநயே நம:
இராமாநுசர் வைபவம்-3
 35) நம்பெருமாளுக்கு அனைத்துவித கைங்கர்யங்களையும் உரிய காலங்களில் நடத்தி வருவதற்காக அந்தணர்களைக் கொண்ட பத்துக் கொத்துக்களையும் அந்தணர் அல்லாதவர்களைக் கொண்ட பத்துக் கொத்துக்களையும் ஏற்படுத்தி அனைவரும் ஸ்ரீரங்கநாதனுடைய கைங்கர்யங்களில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதற்கான வழிமுறைகளை ஏற்படுத்தி வைத்தார்.
 36)எழுநூறு ஸந்யாசிகளாலும், எழுபத்து நாலு ஸிம்ஹாஸநஸ்த்தரான மற்றைய ஆசார்ய புருஷர்களாலும், எண்ணில டங்கா சாத்தின, சாத்தாத முதலிகளாலும், முந்நூறு கொத்தியம்மை மார்களாலும், பன்னீராயிரம் ஏகாங்கிகளாலும் தொழப்படுபவ ராய் “ஸ்ரீரங்கநாததே ஜயது ஸ்ரீரங்க ஸ்ரீச்சவர்த்ததாம்” என்கிறபடியே நம்பெருமாளை மங்ளாசாஸனம் பண்ணிக் கொண்டு எழுந்தருளியிருந்தார் இராமானுசர்.
 37) இவ்வாறாக எழுந்தருளியிருந்த உடையவரை ஆச்ரயித்த முதலியாண்டானுடைய திருக்குமாரரான கந்தாடை யாண்டான், நடாதூராழ்வான், ஸ்ரீபராசரவேதவ்யாச பட்டர், கூரத்தாழ்வான் ஆகியோர் ஸ்ரீபாஷ்யம் எழுதுவதற்கு உறுதுணையாகவும், கூரத்தாழ்வான் எம்பெருமானார் மடத்தில் உள்ள நூலகத்திற்கு காப்பாளராகவும், பண்டகசாலைப் பொறுப்பான ராகவும் பணியாற்றி வந்தனர்.
 38) அருளாளப் பெருமாள் எம்பெருமானார் தாம் மிகச் சிறந்த சாஸ்திரபண்டிதராய்த் திகழ்ந்து வந்தபோதிலும் அழகிய வெண்பாவில் ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்த கோட்பாடுகளை எல்லாம் தன்னுள்ளே கொண்டதாய் அமையப்பெற்ற ஞானசாரம், ப்ரமேய சாரம் என்ற இரண்டு நூல்களை அருளிச் செய்திட அதனால் மகிழ்வுற்ற இராமானுசர் தம்முடைய திருவாராதனப் பெருமாளான ‘பேரருளாளரை திருவாராதனம் பண்ணிக் கொண்டிரும்’ என்று நியமித்தருளினார்.
 39) கிடாம்பியாச்சானும், கிடாம்பிப் பெருமாளும் திருமடைப் பள்ளி கைங்கர்யத்திற்கு கடவராய் இருப்பர்கள். வடுகநம்பி பசுக்களுக்குப் புல் இடுவதற்கும், உடையவருக்கு எண்ணெய்க் காப்பு சாற்றுகைக்கும், உரிய வேளைகளில் பாலமுது ஸமர்ப்பிப்பதற்கும் கடவர்.
 40) முதலியாண்டான் எம்பெருமானார் திருமண்காப்புச் சாற்றிக் கொள்ளும்போது, அதற்கான பணிவிடைகளைச் செய்வார். அருளாளப் பெருமாள் எம்பெருமானார் திருவாராதனம் ஸமர்ப்பிக்கும்போது அவருக்கு அந்த கைங்கர்யத்தில் உதவி செய்திடுவார். எம்பெருமானார் திருவீதிகளில் எழுந்தருளுவதற்கு முன்பாக அவருக்குத் திருவடி நிலைகளை (பாதுகைகளை) ஸமர்ப்பித்திடுவார்.
 41) இந்தக் காரணம் பற்றியே உடையவரது திருவடி நிலைகளுக்கு முதலியாண்டான் என்ற பெயர் நிலை கொண்டு ள்ளது. ஆகவே அடியார்கள் எம்பெருமானார் ஸந்நிதியில் ஸ்ரீசடாரி ஸாதித்திடவேண்டும் என்று கேட்காமல் “முதலியாண்டான் ஸாதித்திட வேண்டும்” என்று பணிவோடு ப்ரார்த்தித்துக் கொள்ளவேண்டும்.
 42) எம்பார் இரவில் இராமாநுசர் திருப்படுக்கையிலே சயனித்திருக்கும் போது அவருடைய திருக்கால்களைப் பிடித்து விடுவர். உடையவருடைய திருப்பரியட்டங்கள் திருத்தவும் திருக்கை ஸமர்ப்பிக்கவும் இரவில் எம்பெருமானார் படுக்கைக்கு எழுந்தருளும் முன்பு அவருடைய திருப்படுக்கையைச் சோதிப்பதும் எம்பார் மேற்கொண்டு வந்த பணிகளாம்.
 43) அன்றாடம் படுக்கை விரிப்புகள் சுத்தப்படுத்தப்பட்டு வெயிலிலே உலர்த்தப் பெற்ற பிறகு அவைகள் திருக் கட்டிலிலே சேர்த்திடப்படும். தினந்தோறும் எம்பார் உடையவர் படுக்கையறைக்கு எழுந்தருள்வதற்கு முன்பு படுக்கையில் படுத்துப் புரள்வாராம். இதைக்கண்ட பலர் எம்பாரிடம் ‘இது தவறானதும், முறையற்ற செயலும் அல்லவா’ என்று வினவிட அதற்கு எம்பார் தாம் இவ்வாறு செய்வது படுக்கையில் ஏதேனும் முட்களோ அல்லது புழுக்களோ இருந்தால் அவை இராமானுசர் திருமேனிக்குத் துன்பம் விளைத்திடும், அவ்வாறு நேர்ந்திடாவண்ணம் தாம் இவ்வாறு செய்வதாக மறுமொழி அளித்தார்.
 44) கோமடத்து சிறியாழ்வான் திருக்கை செம்பும் ஸ்ரீபாதரக்ஷையும் எடுப்பர். பிள்ளை உறங்காவில்லிதாஸர் வரவு, செலவு கணக்குகளை அன்றாடம் எழுதிக் கொண்டும் கருவூல காப்பாளராகவும் பணிபுரிவர்.
 45) அம்மங்கியம்மாள் பால் அமுது காய்ச்சுவார். உக்கலாழ்வான் திருத்தளிகை மாற்றுவார். மாருதியாண்டான் திருவாராதனத்திற்கும், தளிகைக்குமான நீர் கொணர்ந்து சேர்ப்பார். மாறொன்றில்லா சிறியாண்டான் அமுதுபடி சுத்தம் செய்வது, கரியமுது திருத்துவது ஆகிய பணிகளைச் செய்துபோவார்.
 46) வண்டரும், செண்டரும் தினந்தோறும் மடத்துக்கு 1,000 பொன் ஸமர்ப்பிப்பர். இவர்கள் உறையூர் சோழருடைய அரண் மனையில் படைத்தலைவர்களாக பணி புரிந்து வந்தனர். இவர்கள் மல்யுத்த வீரர்கள்.
 47) ராமாநுஜ வேளைக்காரர் எம்பெருமானார் எழுந்தருளும்போது திருமேனிக்காவலராகப் பணி புரிந்து வந்தனர். அகளங்க நாட்டாழ்வான் எதிரிகளை அழித்து திருவரங்கத்தைக் காத்திடும் பணியை செய்து வந்தார். இவ்வாறு உடையவரை ஆச்ரயித்திருந்தோர் பலரும் பல கைங்கர்யங்களை செய்து வந்தனர். காவிரி நீரிலே குள்ளக் குளிரக் குளிர குளித்து நீராடி, மெல்லக் கரையேறி திருமுடி, திருமேனிகளுக்குத் தனித்தனியே திருவொற்றாடை சாற்றி காஷாயங்களைத் தரித்து கைங்கர்யங்கள் செய்வதற்கு அனுகுணமாகத் திருமண்காப்பு சாற்றிக் கொண்ட பிறகு ஜல பவித்ர பூர்வமாக சுத்த ஆசமனம் கண்டருளினார். 
 

அரங்கநாத சுவாமி தேவஸ்தானத்திற்காகத் தொகுத்தவர்: ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ அ.கிருஷ்ணமாசார்யர்.                    (முற்றும்)

Sriranganachiyar Adhyayanothsavam


ஸ்ரீ: 
    
நம்மாழ்வார் திருவடிகளே சரணம். திருமங்கையாழ்வார் திருவடிகளே சரணம்.
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே
நம: 

 “ஸ்ரீரங்கநாச்சியார் ஸந்நிதியில் நடைபெறும்
பகல்பத்து இராப்பத்துத்திருநாட்கள்” (8-01-2010 முதல் 18-01-2010 வரை)


1) நம்பெருமாள் திருமுன்பு அரையர்களால் நாலாயிர திவ்யப்பிரபந்தம் ஸேவிக்கப் பெற்றதுபோல் ஸ்ரீரங்கநாச்சியார் ஸந்நிதியில் அரையர்களும் அத்யாபகர்களும் நாலாயிர திவ்யப் பிரபந்த ஸேவையை செய்திடுவர். இதனை தாயார் “அத்யயனோத்ஸவம்” என்று அழைப்பர்.
2)இந்த உத்ஸவத்தின் முதல் 5 நாட்களில் முதலாம் ஆயிரம், இரண்டாம் ஆயிரம் ஆகியவை ஸேவிக்கப் படும். ஒவ்வொரு திவ்யப்பிரபந்தத்தின் தொடக்கத்தில் அரையர் முதல் பாட்டை தாளத்தோடு இசைத்திடுவார்.  அதன்பின் அரையர்களும் அத்யாபகர்களும் பாசுரங்களை ஸேவித்திடுவர். அன்று ஸேவிக்கப்படும் திவ்யப்பிரபந்தத்தின் ஈற்று இரண்டு பாசுரங்களில் கடைசிப் பாசுரத்திற்கு முன் பாசுரத்தை அத்யாபகர்கள் இரண்டு தடவை ஸேவித்திடுவர். கடைசிப் பாசுரத்தை அரையர் தாளத்தோடு இசைத்திடுவார்.
3) தாயார் அத்யயனோத்ஸவ பகல்பத்து 5ஆம் திருநாள் அன்று நம்பெருமாள் திருமுன்பு நடைபெற்றதுபோலே முத்துக்குறி தம்பிரான்படி வ்யாக்யானத்துடனும் அபிநயத்துடனும் நடைபெறும்.
4) இன்று பெரிய திருமொழி சாற்றுமுறைக்காக அரையர் தீர்த்தம், ஸ்ரீசடாரி ஸாதித்திடுவார்.
5) இந்த வைபவங்கள் அனைத்தும் நவராத்ரி மண்டபத்திற்கு அண்மையில் ஸ்ரீரங்கநாச்சியார் ஸந்நிதி மகாமண்டபத்தில் நடைபெறும்.
6) அத்யயனோத்ஸவம் 6ஆம் நாள் தொடங்கி 10ஆம் நாள் ஈறாக “திருவாய்மொழி” ஸேவை நடைபெறும்.
7) ஒவ்வொருநாளும் தாயார் புறப்பாடு கண்டருளி கத்யத்ரய மண்டபத்திற்கு எழுந்தருளுவார்.
8) கத்யத்ரய மண்டபத்தில் அனைத்து ஆழ்வார்களும் சிலா ரூபத்தில் தூண்களில் எழுந்தருளியுள்ளனர்.
9) திருவாய்மொழித் திருநாள் 4ஆம் உத்ஸவத்தில் “இரணியவதம்” அபிநயம் மற்றும் வ்யாக்யானங்கள் ஸேவிக்கப்படும்.
10) இன்று அரையர் தீர்த்தம் ஸ்ரீசடகோபம் ஸாதித்தருள்வார்.
11) தாயார் அத்யயனோத்ஸவ இராப்பத்தில் முதல் நான்கு நாட்களுக்கு வீணை ஏகாந்தம் நடைபெறும்.
12) இராப்பத்து 5ஆம் திருநாளன்று சாற்றுமுறை, திருத்துழாய் விநியோகிக்கப்படும்.
13) இராப்பத்து சாற்றுமுறையான அடுத்தநாள்,  3ஆவது ஆயிரமான இயற்பா பாசுரங்கள் ,இராமாநுச நூற்றந்தாதி ஆகியவை ஸேவிக்கப்பெற்று திருத்துழாய் தீர்த்த விநியோகம் ஸ்ரீரங்கநாச்சியார் ஸந்நிதியில் நடைபெறும்.
14) இந்தத் திவ்யதேசத்தில் மேற்கொண்டுவரும் நீண்டகால பழக்க வழக்கங்களின்படி தாயார் அத்யயனோத்ஸவம் முடிந்த அடுத்தநாள் முதலாழ்வார்கள் அவதரித்த திருநக்ஷத்ரங்களான திருவோணம் அல்லது அவிட்டம் அல்லது சதயம் நேர்படும். அன்றையதினம் முதலாழ்வார்கள் ஸந்நிதியில் திருப்பல்லாண்டு தொடக்கம் செய்யப்படும். திருக்கார்த்திகை தொடங்கி அனுஷ்டிக்கப்பட்டு வந்த ‘அனத்யயன காலம்’ முதலாழ்வார்கள் ஸந்நிதியில் “திருப்பல்லாண்டு” தொடக்கத்துடன் முடிவுறுகிறது.
15) இவ்வாறு முதலாழ்வார்கள் ஸந்நிதியில் திருப்பல்லாண்டு தொடங்காமல் தை மாதத்தில் நடைபெறும் பூபதித்திருநாளில் திருவீதிகளில் திவ்யப்பிரபந்தம் ஸேவித்திட இயலாது.
16) தாயார் இராப்பத்து 2ஆம் திருநாள் தை முதல் நாளான மகர சங்கராந்தி உத்ஸவம் நடைபெறும். அன்றையதினம் உபயநாச்சிமார்களோடு நம்பெருமாள் ஆயிரங்கால் மண்டபத்தின் வடகோடியில் அமைந்துள்ள சங்கராந்தி மண்டபத்திற்கு எழுந்தருளுவார்.  அப்போது அரையர்கள் திருப்பாவை 30 பாசுரங்களையும் தாளத்துடன் ஸேவித்து, சாற்றுமுறை செய்திடுவர்.
திருநெடுந்தாண்டகம் தொடங்கி இயற்பா ஈறான விழாக்களைப் பற்றி  Flex-இல்  குறிப்பிடப்பட்டுள்ள செய்திகள் தனிப் புத்தகமாக ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ , 214, கீழை உத்தரவீதி, திருவரங்கம்  என்ற முகவரியில் கிடைக்கும். 

 (Phone  :0431 2434398 , 98842  89887 , 90424  53934  )            ***
தொகுப்பு: ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ.கிருஷ்ணமாசார்யர்.               

Ramanusa Vaibhavam Part II


ஸ்ரீமதே ராமாநுஜாய நம : ஸ்ரீமத் வரவரமுநயே நம:

இராமாநுசர் வைபவம் – 2

22. இராமானுசரின் வாழ்க்கை வரலாற்றை விரிவாகவும் புதிய கோணங்களில் பல புதுச்செய்திகளையும் கூறுகின்றது ‘ராமாநுஜார்ய திவ்யசரிதை’ என்ற இந்நூல்.
23. பிள்ளைலோகம் ஜீயர் வரலாற்றுணர்வு மிக்கவர்; காலக் குறிப்புகளை வரலாற்று ஆய்வாளர்களுக்கு விருந்தாகப் படைத்தவர்; இந்தியத் துணைக் கண்டத்தின் நிலவியல் அமைப்பு, தட்பவெப்பநிலை, ஆட்சியாளர்களின் ஆதிக்கம், அரசியல் மற்றும் மாற்றுச்சமயத்தினரின் எதிர்ப்புகள், ஏழை எளிய மக்கள் முதல் மேட்டுக்குடி மக்கள்வரை பரவியிருந்த சமுதாயச் சூழ்நிலை ஆகிய கூறுகளை உட்படுத்தி விரிந்து பரந்த இராமானுச திவ்ய சரித்திரத்தை வழங்கியிருக்கிறார் பிள்ளைலோகம் ஜீயர்.
24. அக்கால ஆட்சியியல், கலையியல், தொழில்முறை, ஆலய நிர்வாஹம் என்று பல்வகைத்துறைகளில் பழகியிருந்த தமிழ்ச் சொற்களை அறிமுகப் படுத்தியிருக்கிறார் இவர் தம் நூலில்.
25. இராமானுசப் பேராறு தென்னரங்கம் தொடங்கி இமயத்தின் கொடுமுடியிலேறியது; விசிஷ்டாத்வைதக் கொடியை ஆங்கே ஏற்றியது அங்கிருந்து பெருகிஓடி பல்வேறு மாநிலங்களில் வளம் கொழிக்க வைத்து மடங்கள் பலவற்றைள நிறுவித் தென்னன் தமிழான புல்லாணியில் கடலோடு கலந்தது. அப்பேராற்றில் குள்ளக் குளிரக் குடைந்தாடிய பெருமக்களே பிள்ளையுறங்கா வில்லிதாசர், கோயில் வண்ணாத்தான், வயலாலி ஞானப்பெண் (இவள் திருக்குலத்தோர் என்று அழைக்கப்படும் தலித் வகுப்பைச் சார்ந்தவள்) ஆகியோரும் மற்றும் மாந்தர் பலரும் ஆவர்.
26. பிள்ளைலோகம் ஜீயர் இராமானுசரின் திக்விஜய வரலாற்றில் நெஞ்சை நெகிழ்விக்கும் நிகழ்ச்சிகள் பலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளார். இராமானுசர் பயணித்த பெருவழிகளைத் திசை சொல்லித் தொலைவு சொல்லி ஒரு பயணவழிகாட்டும் படத்தையே ஜீயர் வரைந்து முன் வைத்திருக்கிறார். அவ்வழிப் புலம்பற்றி ஐநூறு ஆண்டு களுக்குப் பிறகு ஜீயர் தாமும் ஒரு புனிதப் பயணம் மேற்கொண்டு வழிச் செலவில் செவிவழிச் செய்திகளைச் சேகரித்துத் தாம் எழுதிய இராமானுச திவ்ய சரிதைக்குக் கருத்துக் கருவூலங்களைத் தொகுத்து வைத்துள்ளார்.
27. விக்ரமசோழன் திருவீதி கிழக்குப் பகுதியில் (கீழை உத்தர வீதி) இராமானுசர் திருவாய்மொழி விண்ணப்பம் செய்யும் இசைகாரர்களான அரையர்களைக் குடியமர்த்தி அவ்வீதிக்குச் ‘செந்தமிழ்பாடுவார் வீதி’ என்று பெயர் சூட்டினார். ‘செந்தமிழ் பாடுவார்’ என்ற தொடரைத் திருமங்கை மன்னன் திருவாக்கிலிருந்து தேர்ந்தெடுத்தார். (பெரிய திருமொழி 2-8-2)
28. திருவரங்கம் பெரியகோயிலில் பணிபுரிந்த அனைத்துக் கொத்திலுள்ளாரையும் அவர்கள் முன்பு வாழ்ந்துவந்த வெளிச் சுற்றுக்களிலிருந்து குடிபெயரச் செய்து நம்பெருமாள் கைங்கரியங்களுக்கு உதவும்படி திருக்கோயிலுக்கு அண்மையில் உள் திருச்சுற்றுக்களில் வாழ்ந்து வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்தார்.
29.ஆளவந்தார் வாழ்ந்திருந்த மடத்தினைப் பெரியநம்பிக்கும் அதன் எதிர்மனையை மாடத்திருவீதியில் (தற்போதைய கீழைச்சித்திரை வீதியில்) ஆழ்வானுக்கும்,  அந்த மனைக்குத் தெற்குப் பகுதியில் முதலியாண்டானுக்கு ஒரு திருமாளிகையையும் அளித்தார்.
30. பூர்வகாலந்தொட்டு ஸ்ரீபாஞ்சராத்ர ஆகம விதிகளின்படி திருவரங்கம் பெரியகோயிலில் வழிபாடுகள் நடந்து வந்தன.  இடையில் (அவாந்தரத்தில்) வைகாநஸர்களின் ப்ரவேசம் ஏற்பட்டிருந்ததை இராமானுசர் மாற்றி மீண்டும் ஸ்ரீபாரமேச்வர ஸம்ஹிதை ப்ரகாரம் ஸ்ரீபாஞ்சராத்ர ஆகம வல்லுநர்களைக் கொண்டு திருவாராதனங்களையும் திருவிழாக்களையும் நடத்தி வரும்படியான ஏற்பாடுகளைச் செய்தார்.
31. எம்பெருமானார் 25 ஆண்டுகள் திக் விஜயம் செய்து திருவரங்கம் திரும்பினார்.
32. திக்விஜயயாத்ரையைத் திருமாலிருஞ்சோலையில் தொடங்கினார். அப்போதுதான் நூறு தடா நிறைய அக்கார அடிசிலும் வெண்ணெயும் ஏறுதிருவுடையானுக்கு ஸமர்ப்பித்தருளினார். அழகர் திருமலையில் ராமாநுஜகூடம் எழுப்பி பரமஸ்வாமி கைங்கர்யத்தை மேற்பார்வையிடுவதற்கு ஒரு ஜீயரையும் நியமித்தருளினார்.
33. திருமகள் கேள்வனாய், அரவணைமேல் துயில்பவனாய், எல்லா விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொண்டவனாய், தாழ்ந்த குணங்களுக்கு எதிரிடையான கல்யாணகுணங்களுக்கெல்லாம் ஒரிருப்பிடமானவனாய், பொருள்கள் அனைத்திலும் உள்ளுறைபவனாய் விளங்குபவன் ஸர்வேச்வரனான ஸ்ரீமந்நாராயணனிடம் நாம் சரணாகதி செய்யவேண்டும் என்ற உன்னதத் தத்துவத்தைப் போதித்தார்.
34. ஒரு பங்குனி உத்தர நன்னாளிலே அழகிய மணவாளனும் ஸ்ரீரங்கநாச்சியாரும் சேர்ந்து இருக்கின்ற இருப்பிலே நம்போல்வார் நற்கதி அடையும்படி திவ்ய தம்பதிகளிடம் மூன்று கத்யங்களை (சரணாகதிகத்யம், ஸ்ரீரங்ககத்யம், ஸ்ரீவைகுண்ட கத்யம்) விண்ணப்பம் செய்தார்.

ஸ்ரீ அரங்கநாதசுவாமி தேவஸ்தானத்திற்காகத் தொகுத்தவர்: ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ அ.கிருஷ்ணாமாசார்யர்.

Kaisika Ekadasi / Nampaaduvaan


ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீபட்டர் திருவடிகளே சரணம். ஸ்ரீமத் வரவரமுநயே நம:

1) கார்த்திகை மாதம் வளர்பிறை ஏகாதசி கைசிக ஏகாதசி என்று அழைக்கப்படுகிறது.

2) இந்த ஏகாதசியன்றுதான் யோக நித்திரையிலிருந்து பகவான் கண் விழிக்கிறார். அதனால் இதற்கு உத்தான ஏகாதசி அல்லது ப்ரபோத ஏகாதசி என்ற பெயர்களும் வழக்கத்தில் உள்ளன.

3) ஸ்ரீமந்நாராயணன் உத்தான துவாதசியன்று ஸாயங்காலம் துளசிதேவியை விவாஹம் செய்து கொள்வதாக சாஸ்த்ரம் தெரிவிக்கிறது.

4) ஸ்ரீபராசர பட்டரால் கைசிக ஏகாதசியன்று ஸ்ரீவராஹ புராணத்தின் ஒரு பகுதியான கைசிக மாஹாத்மியம் படிக்கப்பட்டு அவர் அருளிச் செய்த விளக்கவுரையைக் கேட்டு மகிழ்ந்த நம்பெருமாள் அவருக்கு கைசிக துவாதசியன்று மேல்வீடு எனப்படும் மோக்ஷத்தைத் தந்தருளினார்.

5) கைசிக மாஹாத்மியத்தில் ஸ்ரீவராஹமூர்த்தி பூமிப்பிராட்டிக்கு நம்பாடுவான் என்பான் திருக்குறுங்குடி திவ்யதேசத்தில் கைசிகம் என்னும் பண்ணால் தன்னை ஏத்தி மகிழ்ந்ததைக் குறிப்பிடுகிறார்.

6) நம்பாடுவான் என்னும் பஞ்சமகுலத்தைச் சார்ந்த பரம பாகவதோத்தமன் ஸோமசர்மா என்னும் ப்ராஹ்மணன்  ப்ரம்ம ராக்ஷஸாகத் திரிந்து அலைந்தபோது அவனுக்கு தான் பாடிய கைசிகப் பண்ணின் பலனைக் கொடுத்து அவனுடைய சாபத்தை நீக்கினான்.

7) இன்றும் இந்த நிகழ்ச்சி கைசிக ஏகாதசியன்று திருக்குறுங்குடி திவ்யதேசத்தில் நடித்துக் காட்டப் படுகிறது.

8) கைசிக ஏகாதசியன்று திருவரங்கத்தில் நம்பெருமாள் அரவணையான பிறகு, அர்ஜுன மண்டபத்தில் எழுந்தருளியிருந்து ஆண்டுதோறும் வஸ்த்ரங்கள் சாற்றுவதில் ஏற்படும் குறைகளை நீக்க 360 “பச்சை” எனப்படும் பட்டு வஸ்த்ரங்களைச் சாற்றிக் கொள்கிறார்.

9)  அப்போது கைங்கர்ய பரர்கள் திருவடி விளக்குவதேல்? அடைக்காய் அமுது நீட்டுவதேல்? திருவிளக்கு தூண்டுவதேல்? என்று கூறிக்கொண்டு பச்சை சாற்றுவர்.

10) அரையர்கள் எழுந்தருளி திருமங்கையாழ்வார் பெரியதிருமொழி ஒன்பதாம் பத்து ஆறாம்திருமொழி “அக்கும்புலியனதளும்” என்று தொடங்கும் 10 பாசுரங்களையும், நம்மாழ்வார் அருளிச் செய்த திருவாய்மொழி 5ஆம் பத்து ஆறாம்திருவாய்மொழி “எங்ஙனேயோ அன்னைமீர்காள்” என்று தொடங்கும் 11 பாசுரங்களையும் அபிநயம் மற்றும் தாளத்தோடு விண்ணப்பம் செய்வர்.

11) முறைகாரபட்டர்ஸ்வாமி எழுந்தருளி ஒன்றான ஸ்ரீபராசர பட்டர் அன்று வாசித்த முறையிலேயே ஸ்ரீவராஹபுராணத்தின் உள்ளீடான கைசிக மாஹாத்மியத்தைக் குல்லாய் தரித்து நம்பெருமாள் திருமுன்பு விண்ணப்பம் செய்வர்.

12) கைசிக துவாதசியன்று முறைகாரபட்டர் நிலையங்கி, குல்லாய், தொங்கு பரியட்டம் ஆகியவற்றைத் தரித்துக் கொண்டு கைசிக புராண ஸ்ரீகோஸத்தோடு நம்பெருமாளுடன் மேலைப்படி வழியாக சந்தன மண்டபத்துக்குள் எழுந்தருளுவார்.

13) மேலைப்படியில் நம்பெருமாள் எழுந்தருளும்போது சாத்தாத ஸ்ரீவைஷ்ணவர்கள் புஷ்பங்களையும், பச்சைக்கற்பூரப் பொடியையும் நம்பெருமாள் திருமேனி மீது வாரியிறைப்பர். இந்த நிகழ்ச்சி கற்பூரப்படியேற்ற ஸேவை  என்று அழைக்கப்படுகிறது.

14) நம்பெருமாள் கருவறையில் பூபாலராயனில் எழுந்தருளியபிறகு மரியாதைகளைப் பெற்ற முறைகார பட்டர் ப்ரஹ்மரதம் கண்டருளுவார்.

திருவரங்கம் பெரியகோயிலில் கைசிக ஏகாதசி உத்ஸவம் 28-11-2009 சனிக்கிழமை அன்று இரவு நடைபெறும்.