Maasi Theppam / Palliyodath ThirunaaL


ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம:

மாசி தெப்போத்ஸவம்

1) பாண்டியர்கள் காலத்தில் தெப்பத்திருநாளானது “எம் மண்டலங் கொண்டு கோயில் பொன்மேய்ந்த பெருமாள் சுந்தரபாண்டிய தேவர்” கைங்கர்யமாக அவர் பெயரிலே நடைபெற்ற திருநாளான சித்திரைத் திருநாளுக்குத் திருக்காவிரியிலே பெரியதாக ஊரணி வெட்டு வித்து திருக்காவிரிநீர் பாய்ச்சி அதிலே முத்தும், பவளமும் கட்டின திருக்காவணமும் கட்டுவித்து ஊரணியிலே திருப்பள்ளி ஓடம் பொன்னாலே பண்ணி நிறுத்தி அதிலே நாய்ச்சிமார்களுடனே பெருமாளை எழுந்தருளச் செய்து தெப்போத்ஸவம் நடைபெற்றது.

2)இவ்வாறு நடைபெற்ற இந்த விழாவானது பிற்காலத்தில் ஆடி பதினெட்டாம் நாள்  திருக்காவிரியில் திருப்பள்ளி ஓட உத்ஸவமாக நடைபெற்று வந்தது.

3)அவ்வாறு ஒரு ஆண்டு நம்பெருமாள் உபயநாய்ச்சிமார்களோடு  திருப்பள்ளி ஓடத்திலே எழுந்தருளி தெப்பத் திருநாள் கண்ட ருளுகையில் துர்மந்திங்களை ப்ரயோகிப்பவர்களுடைய (மாந்த்ரீகர்களுடைய)  அடாத செயலால் தெப்பமானது திருக்காவிரியில் ஏற்பட்ட வெள்ளத்தால் இழுத்துச் செல்லப்பட, அச்செய்தியைக் கேட்டு கூரநாராயண ஜீயர் தம்முடைய வலது திருக்கரத்தில் அணிந்திருந்த திருப் பவித்ரத்தை வலமாகத் திருப்ப நம்பெருமாள் திருப்பள்ளி ஓடமும் காவிரி வெள்ளப் பெருக்கினை எதிர்த்து நிலை கொண்டிற்று.

4)  நாய்ச்சிமார்களும், நம்பெருமாளும் எவ்வித ஆபத்துமின்றி ஆஸ்தானம் சென்றடைந்தார்கள்.

5) இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு கூரநாராயணஜீயர் மந்திரவாதிகளுடைய அடாத செயல்களுக்கு இடம் கொடாதபடி கோயிலுக்கு மேற்கே பெரியதாக ஓர் குளத்தை வெட்டுவித்து அதிலே திருப்பள்ளி ஓடத் திருநாள் நடத்தும்படி பண்ணுவித்தார்.

6) அந்தச் செயலைப் போற்றும் வண்ணம் தெப்பத் திருநாளில் விட்டவன் விழுக்காடு இன்றும் ஸ்ரீரங்கநாராயண ஜீயர் மடத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

7) அதன்பிறகு கந்தாடை ராமாநுஜமுனி காலத்தில் (கி.பி. 1489) அடையவளைந்தானுக்கு மேற்கே அமைந்துள்ள குளத்தைச் சீரமைத்து மைய மண்டபமும் கட்டுவித்தார்.

8) திருக்குளத்தை சீர் அமைத்து அதில் மையமண்டபம் கட்டிய கந்தாடை இராமாநுசமுனி விஜயநகர சாளுவ வீர நரசிம்மனுடைய தமையனாராவார். இவர் கோயில் கந்தாடை அண்ணனை ஆச்ரயித்து அவருக்கு சிஷ்யரானதால் கந்தாடை இராமாநுசமுனி என அழைக்கப் பட்டார். இவரும், இவருடைய சிஷ்யர்களும் திருவரங்க வரலாற்றில் தமக்கென ஒரு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளனர்.

9) தெப்பக்குளத்தைச் சீரமைத்து மைய மண்டபத்தையும் கட்டி வைத்தது கந்தாடை இராமாநுசனாகையாலே அவருக்கு மரியாதை செய்யும் பொருட்டு, நம்பெருமாள் தெப்பத்தை விட்டிறங்கி மைய மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும்போதும், அவ்வாறு எழுந்தருள இயலாத காலங்களில் கரை மண்டபத்திலும் கந்தாடை இராமாநுசனுக்கு ஸேவை ஸாதிப்பார். (தற்போது கந்தாடை இராமாநுசமுனி பட்டத்தை யாரும் அலங்கரிக்காததால் இந்த மரியாதை நடைபெறுவதில்லை.)

10)தற்போது நடைபெறும் மாசித்திருநாள், துளுவ வம்சத்தைச் சார்ந்த விஜயநகர மன்னரான கிருஷ்ணதேவராயர் பெயரில் ஏற்படுத்தி வைக்கப்பட்ட ப்ரஹ்மோத்ஸவத்தின் திரிபு ஆகும். இத்திருநாள் தெப்பத்திருநாளாக தற்போது ஒன்பது நாட்களுக்குக் கொண்டாடப்பட்டு வருகிறது.

11) விஜயநகர துளுவகுல மன்னனான அச்சுததேவராயரின் கி.பி. 1535, கி.பி. 1536, கி.பி. 1539ஆம் ஆண்டுகளில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகள் கிருஷ்ணதேவராயர் திருநாளின் இரண்டாம் நாள் பற்றியும், அந்தத் திருநாளின் முடிவில் விடாய் ஆற்றிக்குப் நம்பெருமாள் அக்கச்சி அம்மன் தோப்புக்கு எழுந்தருளியதையும், ஆறாம் திருநாளன்று தெப்பக்குளம் எழுந்தருளுவது பற்றியும் தெரிவிக்கின்றன. இந்தக் கல்வெட்டுகள் இரண்டாம் திருச்சுற்றான இராசமகேந்திரன் திருச்சுற்றின் மேற்குப் பக்கச் சுவரில் நாயக்கர்கள் சிலைகளுக்கு முன்பு அமைந்துள்ளன.

12) பிரஹ்மோத்ஸவங்களில் நடைபெறும் திருவீதிப் புறப்பாடு போன்று இந்தத் தெப்பத்திருவிழாவின் 9 நாட்களிலும் நடைபெறுகிறது. 8ஆம் திருநாள் தெப்போத்ஸவமாகக் கொண்டாடப் படுகிறது. 9ஆம் திருநாளன்று ஸ்ரீசடாரிக்குத் தெப்பக் குளத்தில் தீர்த்தவாரி நடைபெறுகின்றது. அன்றிரவு பந்தக்காட்சி.

13) மாசி சுக்லபக்ஷ த்ருதீயை (வளர்பிறை மூன்றாம் நாள்) அன்று தெப்பத்திருநாள்  தொடக்கமாகி, சுக்ல பக்ஷ தசமியன்று  திருப்பள்ளி ஓடம் நடைபெறும். (8ஆம் திருநாள்)

14) ப்ரஹ்மோத்ஸவங்கள் போலே 4ஆம் திருநாள் கருட ஸேவை, 6ஆம் திருநாள் யானை வாகனம் ஆகியவை நடைபெறும். ஆனால் 8ஆம் திருநாள் அன்று குதிரை வாகனம் மட்டும் ஓடத்தில் எழுந்தருளப் பண்ணப்பட்டிருக்கும். 8ஆம் உத்ஸவம் என்பது எல்லைக் கரை மண்டபத்தில் நடைபெறவேண்டும். அதற்கிணங்க தெப்பக்குளத்தின் வடகரையில் அமைந்துள்ள மண்டபத்தில் நம்பெருமாள் எழுந் தருளுகிறார்.

15) தெப்பத்திருநாளின்போது நம்பெருமாள் காலைப் புறப்பாட்டில் பல்லக்கில் மட்டுமே எழுந்தளுவார். வாகனங்களில் எழுந்தருளுவது கிடையாது. இந்த உத்ஸவம் திதி அடிப்படையில் கொண்டாடப்படுவதால் கொடியேற்றம் கிடையாது. மேலும் தெப்போத்ஸவம் வசந்தோத்ஸவம் போலே ஒரு கேளிக்கை உத்ஸவமாகும்.

16) மாசி கருட ஸேவையன்று நம்பெருமாள் வெள்ளிக் கருடனில் ஸேவை ஸாதிப்பார். மற்றைய கருட ஸேவைகளைவிட மாசி கருட ஸேவை மிகச் சிறந்ததாகக் கருதப்படுகிறது.

17) நம்பெருமாள் 8ஆம் திருநாளன்று தெப்பக்குளத்திற்கு எழுந்தருளும்போது உத்தரவீதியையும், சித்திரை வீதியையும் இணைக்கும் மேல்திசைக்கோபுரமான சக்கிலியன் கோட்டை வாசல் வழியாக யாதும் காரணம் பற்றியோ எழுந்தருளுவது இல்லை. இந்தத் திருக்கோயிலில் தர்மவர்மா திருச்சுற்று தொடங்கி அகளங்கன் திருச்சுற்று ஈறாக மேற்குத்திசையில் கோபுரங்கள் அமைக்கப்படவில்லை. 6ஆம்திருச்சுற்றின் மேல்திசைக்கோபுரமே சக்கிலியன் கோட்டை வாசல். மேற்கு திசைப் புறப்பாடுகள் அனைத்தும் மேலைச் சித்திரை வீதியிலிருந்து மேற்கு அடையவளைந்தானுக்குச் செல்லும் கோபுரம் வழியாகத்தான் நடைபெறும்.

தொகுப்பு: ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ.கிருஷ்ணமாசார்யர்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: